Tuesday, June 24, 2008

443. இது தான்டா இந்தியத்தாத்தா !

இது நடந்தது ஜூன் 2002-இல்!

அமெரிக்க அதிபர் புஷ் ISI நிறுவனத்தில் பணி புரிந்த ஒருவருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதை வழங்கி கௌரவித்தார் என்று கேள்விப்பட்டால், நாம் கொதித்துப் போக வேண்டியதில்லை ! நான் இங்கு குறிப்பிடும் ISI, பாகிஸ்தானின் Inter Services Intelligence என்கிற உளவுத்துறை நிறுவனம் அல்ல, நம் நாட்டின் பாரம்பரியமிக்க, கொல்கத்தாவிலுள்ள Indian Statistical Institute என்கிற அரசு நிறுவனம் :)

கௌரவிக்கப்பட்டவர் கலியம்புடி ராவ் என்கிற இந்திய புள்ளிவிவரயியல் (Statistics) மேதை! அவரது பெயரால் வழங்கப்படும் பல கோட்பாடுகளை (Rao Distance, Rao's Score Test, Cramer-Rao Inequality, Rao-Blackwellization, and Fisher-Rao Theorem) கண்டுபிடித்து, புள்ளிவிவரயியல் துறைக்கே பெருமை சேர்த்த வித்தகர் இவர்!

புஷ் வழங்கிய, ஜனாதிபதியின் அறிவியலுக்கான தேசியப் பதக்கத்தை இவருக்கு முன்னால் வாங்கியுள்ள, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நால்வர் - இயற்பியலுக்கு நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர், மரபியல் மேதை ஹர்கோபிந்த் குரானா, பெல் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் குமார் படேல் மற்றும் அருண் நேத்ரவல்லி ஆகியோர். மேற்கூறிய நால்வரும் தங்களது இளவயதிலேயே அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர்கள். ஆனால், கலியம்புடி ராவ் ISI இயக்குனர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தனது 60-வது வயதில் அமெரிக்காவுக்குச் சென்றார், அவரது மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்த காரணத்தால். பொதுவாக, இந்த வயதில் இந்திய தாத்தா/பாட்டிகள் அமெரிக்காவில் வளரும் தங்களது பேரக் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு வேண்டி அங்கு செல்வது வழக்கம் :)

ஆனால், நமது சூப்பர் தாத்தாவோ, தனது 62-வது வயதில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்து, 70வது வயதில், பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் புள்ளி விவரயியல் துறைத்தலைவராக உயர்ந்து, 75வது வயதில் அமெரிக்க குடிமகனா(ரா)கி, தனது 82வது வயதில், அமெரிக்கா ஜனாதிபதியின் அறிவியல் பதக்கத்தை வென்று பெருமை பெற்றவர்.

ராவ், "பணி ஓய்வு பெற்றபின் இந்தியாவில் நம்மை யாரும் மதிப்பதில்லை. உடன் பணி புரிபவர் கூட உங்கள் பதவிக்கு மரியாதை தருகிறார்களே அன்றி உங்கள் உழைப்பையும், மேதமையையும் மதிப்பதில்லை" என்று கூறுவதை வைத்து அவரது இந்திய அனுபவம் கசப்பானது என்று சொல்லி விட இயலாது. ஏனெனில், இவர் இந்திய அரசின் பத்மவிபூஷன் விருதை பெற்றவரும் கூட!

அவர் பணி புரியும் பென்ஸில்வேனியா பல்கலைக்கழகக் குறிப்பொன்று "நவீன புள்ளிவிவரயியலின் ஒரு முக்கிய முன்னோடியாகவும்,உலகின் தலை சிறந்த 5 புள்ளிவிவரயியலாளர்களில் ஒருவராகவும் ராவ் உலக அரங்கில் அறியப்பட்டுள்ளார்" என்று புகழாரம் சூட்டுகிறது. அவரது ஆராய்ச்சி, பொருளாதாரம், வானிலை, மருத்துவம், ஏரோனாடிக்ஸ் என்று பல துறைகளின் மேம்பாட்டுக்கு உதவியிருக்கிறது.

ராவ் இவ்விருதை புள்ளிவிவரயியலில் இந்தியாவின் சிறப்பு மிக்க பாரம்பரியத்திற்கு கிடைத்த மரியாதையாகவே பார்க்கிறார். ராவ் குறிப்பிடும் பாரம்பரியத்தின் அடித்தளத்தை அமைத்தவர், P C மஹாலனோபிஸ், இவர் தான் ISI நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆவார். உலகின் புள்ளிவிவரயியலாளர்களில் பெரும்பான்மையினர் இந்தியர்கள் என்பது கூடுதல் விவரம்!

எ.அ.பாலா

6 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

சின்னப் பையன் said...

இது சீரியஸ்: வாவ். சூப்பர் தாத்தாவா இருக்காரே. இவரை பற்றி செய்தி கொடுத்ததற்கு நன்றி...

சின்னப் பையன் said...

இது தமாஸ்: நம்ம கேப்டன் இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சா, இவரை மாதிரியே பேர் எடுக்கலாம்... என்ன சொல்றீங்க...

Sridhar Narayanan said...

அரித தகவல்களுக்கு நன்றி. 62 வயதில் அமெரிக்க இன்னிங்க்ஸை தொடங்கியிருக்கிறார் போல. நிஜத்திலுமே இளைஞர்தான்.

2012 வரைக்கும் ஹில்லரி கிளிண்டைனை சப்போர்ட் பண்ணப் போறீங்களா? :-))

மருதநாயகம் said...

ஒரு இந்தியரின் சாதனைகள் பற்றி பல தகவல்களை வழங்கி இருக்கிறீர்கள் நன்றி

enRenRum-anbudan.BALA said...

சின்னப்பையன்,
கருத்துக்கு நன்றி.
//நம்ம கேப்டன் இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சா, இவரை மாதிரியே பேர் எடுக்கலாம்... என்ன சொல்றீங்க...
//
இதெல்லாம் கொஞ்சம் ஓவர் :)

sridhar,
வருகைக்கு நன்றி.
ஒபாமா தேர்தலில் தோற்றவுடன் ஹில்லாரி படத்தை எடுத்துடுவேன் :)

மருத நாயகம்,
வருகைக்கு நன்றி.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails